×

`வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை’ இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா: 45 நாட்களில் பதவி விலகினார்; அடுத்த வாரம் புதிய பிரதமர் தேர்வு

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை காபந்து பிரதமராக தொடருவேன் என்று அவர் தெரிவித்தார். இங்கிலாந்தில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து நடந்த கட்சி தேர்தலில் முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சாளியினருமான ரிஷி சுனக், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், வெற்றி பெற்ற லிஸ் டிரஸ் கட்சி தலைவராகவும் இங்கிலாந்தின் புதிய பிரதமராகவும் பொறுப்பேற்றார். இங்கிலாந்து சட்டத்தின்படி, கட்சித் தலைவராக இருப்பவரே அங்கு பிரதமராக பதவியில் இருக்க முடியும்.டிரஸ் ஆட்சி நிர்வாகத்தில் ஆரம்பம் முதலே குழப்பம் ஏற்பட்டது., தனது மினி பட்ஜெட்டில் வரி சலுகைகளை அறிவித்து குளறுபடி ஏற்படுத்திய நிதியமைச்சர் க்வாசி க்வாடெங்கை பதவி நீக்கி விட்டு, புதிய நிதியமைச்சராக ஜெரமி ஹன்ட்டை நியமித்தார். மேலும், இவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயல்லா பிரேவர்மேன் பதவி வகித்து வந்தார். இவரது தந்தை கோவாவை சேர்ந்தவர். தாய் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் நேற்று முன்தினம் பிரதமர் லிஸ் டிரஸ்ஸை சந்தித்தார். அப்போது நாட்டின் கொள்கை முடிவு தொடர்பான விவகாரத்தில் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரேவர்மேன் பதவியை ராஜினாமா செய்தார். டிரஸ்சின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த மேலும் சில அமைச்சர்களும், அரசின் உயர் பதவிகளை வகிப்பவர்களும் அடுத்தடுத்து பதவி விலகப் போவதாக தகவல் வெளியானது. இந்த பரபரப்பான சூழலில், பிரதமர் லிஸ் டிரஸ் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தான் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியவில்லை என்பதால் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதமராக பதவியேற்ற 45 நாட்களில் அவர் தனது பதவியை இழந்துள்ளார். லண்டனில் பிரதமர் அலுவலகம் வெளியே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரஸ் கூறியதாவது: சர்வதேச நாடுகளில் நிலவும் நிலையற்ற தன்மை, பொருளாதார பாதிப்புகளுக்கு இடையே பிரதமராக பொறுப்பேற்றேன். மக்களும், தொழிலதிபர்களும் எப்படி வரி செலுத்தப் போகிறோம் என்பது தெரியாமல் கவலை அடைந்தனர். உக்ரைன் மீதான புடினின் போர் ஐரோப்பிய கண்டத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் மந்தநிலை நீடித்தது. இவற்றை எல்லாம் மாற்றுவேன் என்று கூறி கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரானேன். மின்சாரம், கேஸ் மற்றும் தேசிய ஆயு ள்காப்பீடுக்கான வரிகள் குறைக்கப்பட்டது. குறைந்த வரி, அதிக பொருளாதார வளர்ச்சி என்னும் நோக்கத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இந்த சூழலில் என்ன வாக்குறுதிகள் கொடுத்து கட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றேனோ அவற்றை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, பதவியில் இருந்து விலகுவதாக மன்னர் சார்லஸ் இடம் தெரிவித்துள்ளேன். இன்று (நேற்று) காலை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் சர் கிரகாம் பிராடியை சந்தித்தேன். அப்போது அடுத்த வாரத்தில் புதிய கட்சித் தலைவருக்கான தேர்தல் நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. இது சரியான நிதித் திட்டத்தை வழங்கவும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பராமரிக்கும் பாதையில் தொடர்ந்து செல்வதையும் உறுதிப்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.* ரிஷி சுனக்கிற்கு வாய்ப்புஅடுத்த வாரத்தில் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லிஸ் டிரஸ்ஸை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கே புதிய பிரதமராகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கன்சர்வேட்டிவ் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதே நேரம், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் மீண்டும் பிரதமராக வாய்ப்புள்ளது.இங்கிலாந்தில் குறைந்த கால பிரதமர்கள்ஜார்ஜ் கேனிங்    121 நாட்கள்    1827 ஏப்.10 – 1827 ஆக.8பெரிட்ரிக் ஜான் ராபின்சன்    144 நாட்கள்    1827 ஆக.31 -1828 ஜன.21போனர் லா    210 நாட்கள்    1922, அக்.23 – 1923 மே 20* மிக குறைந்த காலம்இங்கிலாந்தில் பிரதமராக பதவி வகித்தவர்களில் மிக குறைந்த காலம், அதாவது வெறும் 45 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தவர் லிஸ் டிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.* உதவவில்லைகடந்த கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், தான் மீண்டும் கட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகும் கனவை நிறைவேற்றி கொள்ளவே, லிஸ் டிரஸ்ஸின் வரிக்குறைப்பு நடவடிக்கைகளில் அவருக்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. * மீண்டும் இருவர் போட்டிஅடுத்த வாரம் நடக்க இருக்கும் கட்சி தலைவர் போட்டியில் ரிஷி சுனக்கிற்கு வெளிப்படையான ஆதரவு இருப்பதாக தெரிந்தாலும், புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்ற ஜெரமி ஹன்ட், தனது நிதி நடவடிக்கைகளினால் கடந்த ஒரு வாரத்தில் நல்ல செல்வாக்கு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இந்த முறையும் ரிஷி சுனக்கிற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் நிதியமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது….

The post `வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை’ இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா: 45 நாட்களில் பதவி விலகினார்; அடுத்த வாரம் புதிய பிரதமர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : UK ,PM ,Liz Truss ,London ,Dinakaran ,
× RELATED கோடிக்கணக்கான நன்கொடைக்காக...